உலகக்கோப்பை கிரிக்கெட்; 7-வது வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா...? - இலங்கையுடன் நாளை மோதல்...!
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை மும்பையில் சந்திக்க உள்ளது. இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
அதேவேளையில் 6 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இலங்கை அணி 2 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. நாளைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும் என்பதால் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.