உலகக்கோப்பை இறுதிப்போட்டி; சொந்த மண் ராசி இந்திய அணிக்கு கைகொடுக்குமா?
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இதில் சொந்த மண்ணில் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால் இந்திய அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில் சொந்த மண் ராசி இந்திய அணிக்கு கைகொடுக்குமா? என்பது பலரது தரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அந்த வகையில் கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களை கருத்தில் கொண்டால் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே கோப்பையை கைப்பற்றியுள்ளன. 2011-ல் இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியும் , 2015-ல் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியும் 2019-ல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியும் கோப்பையை கையில் ஏந்தியுள்ளன.