ஐரோப்பிய கால்பந்து தகுதிச்சுற்று: பிரான்ஸ் அணி 2-வது வெற்றி


ஐரோப்பிய கால்பந்து தகுதிச்சுற்று: பிரான்ஸ் அணி 2-வது வெற்றி
x

ஐரோப்பிய கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

டப்ளின்,

ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறும் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு (யூரோ சாம்பியன்ஷிப்) போட்டியை நடத்தும் ஜெர்மனியை தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் தகுதி காணும். இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறும்.

இதில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த 'பி' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. பிரான்ஸ் வீரர் பவார்ட் 50-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிப்ரால்டரை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது.

போலந்து நாட்டின் வார்சா நகரில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை சாய்த்து முதல் வெற்றியை சொந்தமாக்கியது. இதேபிரிவில் அரங்கேறிய செக்குடியரசு-மால்டோவா ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.


Next Story