பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: சுவீடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: சுவீடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy; twitter/@FIFAWWC

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பிரிஸ்பேன்,

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2-ம் சுற்று ( ரவுண்ட் ஆப் 16) முடிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இன்று நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

2-வது காலிறுதி ஆட்டத்தில் சுவீடன்- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை அமண்டானா இலெஸ்டெட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் சுவீடன் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தின் 51-வது நிமிடத்தில் சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி சுவீடன் வீராங்கனை பிலிப்பா ஏஞ்சல்டால் கோல் அடித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை ஹோனோகா ஹயாஷி கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முழுநேர ஆட்ட முடிவில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் அணி இந்த உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுடன் வெளியேறியது. சுவீடன் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Next Story