அகில இந்திய ஆக்கி: இந்திய விமானப்படை-இந்திய ராணுவம் அணிகள் இன்று மோதல்


அகில இந்திய ஆக்கி: இந்திய விமானப்படை-இந்திய ராணுவம் அணிகள் இன்று மோதல்
x

நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில்-இந்தியன் ரெயில்வே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் நேஷனல் வங்கி 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. பஞ்சாப் நேஷனல் வங்கி அணியில் சஞ்சய் (2-வது நிமிடம்), நிங்கோம்பாம் ஜென்சன் சிங் (49-வது நிமிடம்) கோல் அடித்தனர். அரைஇறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தமிழக அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படையை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. கடற்படை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். கடற்படை அணியில் சன்னி மாலிக் (28-வது நிமிடம்) ஒரு கோலும், கர்நாடக அணியில் பாரதி குர்டாகோடி (47-வது நிமிடம்), செல்சியா மெடப்பா (54-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில்-இந்தியன் ரெயில்வே அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியன் ஆயில் அணியில் அங்கித் பால், தல்விந்தர் சிங், குர்ஜிந்தர் சிங், ரோஷன் மின்ஸ் ஆகியோரும், ரெயில்வே அணியில் பிரதாப் லக்ரா, குர்சாகிப்ஜித் சிங், யுவராஜ் வால்மிகி, அதுல்தீப் உள்ளிட்டோரும் கோல் போட்டனர். ரெயில்வே அணி 2 வெற்றி, 2 டிராவும், இந்தியன் ஆயில் அணி 2 வெற்றி, ஒரு டிராவும் கண்டுள்ளன.

இன்று நடைபெறும் கடைசி சுற்று லீக் ஆட்டங்களில் இந்திய விமானப்படை-இந்திய ராணுவம் (பிற்பகல் 2.30 மணி), மத்திய தலைமைச் செயலகம்-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story