ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்


ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy : @asia_hockey twitter

தினத்தந்தி 12 Aug 2023 12:18 AM GMT (Updated: 12 Aug 2023 7:28 AM GMT)

இந்திய ஆக்கி அணி 5-வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரைஇறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

அதே போல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் மலேசியா அணி முதல் முறையாக இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது. மறுபுறம் 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கான பிளே-ஆஃப் சுற்று ஆட்டத்தில் ஜப்பான்-தென்கொரியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story