சென்னையில் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு


சென்னையில் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
x

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை ஆக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஆக்கி ஸ்டேடியம் ரூ.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அனைத்து நவீன வசதிகளுடன் ஸ்டேடியம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. 2007-ம் ஆண்டு ஆசிய ஆக்கி போட்டிக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஆட்டத்தை காண ஆக்கி ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் ஆகஸ்டு 3-ந் தேதி சீனாவையும், 4-ந் தேதி ஜப்பானையும், 6-ந் தேதி மலேசியாவையும், 7-ந் தேதி தென் கொரியாவையும், 9-ந் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்திய அணியில் எல்லா ஆட்டங்களும் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தற்போது போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்-லைன் மூலம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீரர் எஸ்.கார்த்தி அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, ஷாம்ஷெர் சிங், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், எஸ்.கார்த்தி.


Next Story