உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதல்


உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதல்
x

உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதுகின்றன.

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நம்பர் ஒன் அணியும், 3 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தியது. நீயா-நானா? என்று பலமாக வரிந்துகட்டிய இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றியை ருசித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஜெர்மனி அணியில் கோன்சலோ பீலட் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 'ஹாட்ரிக்' கோல் (43, 52, 58-வது நிமிடம்) அடித்தார். ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது இரு அணியினரும் 3-3 என்ற கணக்கில் சமனில் இருந்தனர். கடைசி நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லஸ் வெலென் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கும் ஜெர்மனி பழிதீர்த்துக் கொண்டது.

மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம்- நெதர்லாந்து அணிகள் கோதாவில் குதித்தன. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான 60 நிமிடங்களில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் பெல்ஜியம் 3-2 என்ற கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிசுற்றை எட்டியது.

நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் மகுடத்துக்காக மோதுகின்றன.


Next Story