எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராக இருக்கிறோம் - இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர்


எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராக இருக்கிறோம் - இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர்
x

image courtesy; PTI

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணி தகுதி பெறும் என்று பயிற்சியாளர் ஜன்னெக் ஸ்கோப்மேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நாளை முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக்குடியரசு அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி தனது முதலாவது லீக்கில் நாளை அமெரிக்காவை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணி தகுதி பெறும் என்று பயிற்சியாளர் ஜன்னெக் ஸ்கோப்மேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு மூலம் நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். நடந்து முடிந்த போட்டிகள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை. இந்த தொடரில் நன்றாக விளையாட முடியும் என்று நம்புகிறோம். முன்பை விட நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முழு திறமையை வெளிப்படுத்தினால் எங்களால் இந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

அமெரிக்கா அச்சுறுத்தலான ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக முன்பு விளையாடி இருக்கிறோம். இருப்பினும் கடந்த கால ஆட்டமோ, தரவரிசையோ இங்கு ஒரு பொருட்டே கிடையாது. நாங்கள் சிறந்த அணி, சிறந்த ஆக்கி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராக இருக்கிறோம். எங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை. களத்தில் என்ன தேவையோ அதை செய்வோம். சூழ்நிலையை புரிந்து அந்த தருணத்தில் ஆட்டத்தின் தேவைக்கு ஏற்ப சரியான முடிவெடுத்து ஆடுவதே எங்களது திட்டமாகும்' என்றார்.


Next Story