தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆக்கி போட்டி: மைசூரு அணி 'சாம்பியன்'


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆக்கி போட்டி: மைசூரு அணி சாம்பியன்
x

தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் மைசூரு அணி முதலிடம் பிடித்தது .

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 6 நாட்கள் நடந்தது. 30 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் மைசூரு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 2-வது இடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 4-ம் இடத்தையும் பெற்றது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், காசோலைகளையும் வழங்கினார். முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுக்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் செண்பக மூர்த்தி, செயலாளர் ருக்மினிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story