பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா


பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
x

உஸ்பெகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள் எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு கோல் மழை பொழிந்தனர்.

ககாமிகஹரா,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. குட்டி அணியான உஸ்பெகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள் அலைஅலையாக எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு கோல் மழை பொழிந்தனர். 3-வது நிமிடத்தில் வைஷ்ணவி கோல் கணக்கை தொடங்கி வைத்தார். அதில் இருந்து கடைசி நிமிடம் வரை கோல் அடித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் பதிலுக்கு உஸ்பெகிஸ்தானால் ஒரு கோல் கூட திருப்ப முடிவில்லை.

முடிவில் இந்தியா 22-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை போட்டுத்தாக்கியது. இந்திய அணியில் மொத்தம் 8 பேர் ேகால் அடித்த பட்டியலில் இணைந்தனர். இதில் அதிகபட்சமாக அன்னு 6 கோலும் (13, 29, 30, 38, 43, 51-வது நிமிடம்), மும்தாஸ் கான், தீபிகா தலா 4 கோலும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 5-ந்தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான தென்கொரியா 5-1 என்ற ேகால் கணக்கில் சீனதைபேயை தோற்கடித்தது.


Next Story