ஊக்க மருந்து விவகாரம்: 2018–ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை

ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷியாவை சேர்ந்த பல வீரர்கள் சிக்கியதால் 2018–ம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாசானே,
ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷியாவை சேர்ந்த பல வீரர்கள் சிக்கியதால் 2018–ம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து விவகாரம்2014–ம் ஆண்டில் ரஷியாவில் உள்ள சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ரஷிய வீரர்–வீராங்கனைகளில் 11 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு அவர்களின் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் ரஷியாவில் அரசு உதவியுடன் வீரர்–வீராங்கனைகள் ஊக்க மருந்து எடுத்து வருவதாகவும் சில அறிக்கைகள் வெளியானது. இந்த ஊக்க மருந்து விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விரிவான விசாரணை நடத்தியது.
ரஷியாவுக்கு தடைவிசாரணையில் ரஷியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2018) தென்கொரியாவில் உள்ள பையோங்சாங்க் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி) உத்தரவிட்டுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்காத ரஷிய வீரர்–வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ் போட்டியில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ரஷிய விளையாட்டு மந்திரியாக இருந்த தற்போதையை துணை பிரதமர் விதாலி முட்கோவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டி அமைப்பு குழுவின் தலைவராக விதாலி முட்கோ இருக்கிறார்.
ஒலிம்பிக் கமிட்டி இடைநீக்கம்மேலும் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் அதன் தலைவர் அலெக்சாண்டர் சுகோவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 9–ந் தேதி தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷியாவின் தேசிய கொடி பறக்க விடப்படாது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் நடவடிக்கையை அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் ஒலிம்பிக் கமிட்டி வரவேற்றுள்ளது. இது குறித்து ரஷிய துணை பிரதமர் விதாலி முட்கோ கருத்து தெரிவிக்கையில், ‘ரஷியாவின் மதிப்பை கெடுக்க முயற்சி நடக்கிறது. பொதுவான கொடியின் கீழ் ரஷிய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என்பது அவமானமாகும்’ என்றார்.
ஒலிம்பிக் கவுன்சில் கருத்து‘ஒலிம்பிக் போட்டி மற்றும் விளையாட்டு நேர்மையின் மீது முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரஷியா தாக்குதல் தொடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பு செய்வதன் மூலம் ஒருபோதும் எதனையும் சாதிக்க முடியாது. ஊக்க மருந்து சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ரஷிய வீரர்கள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புறக்கணிப்பு தேவையற்றது’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் கருத்து தெரிவித்துள்ளார்.