குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்தது 39 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்


குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்தது 39 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 2018-02-26T01:23:18+05:30)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது.

பியாங்சாங்,

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவு பெற்றது. நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் கடந்த 16 நாட்களாக நடந்து வந்த 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று இரண்டு போட்டிகள் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தன.

நீண்ட தூர பனிச்சறுக்கு பந்தயத்தில் (கிராஸ்-கன்ட்ரி ஸ்கீயிங்) 30 கிலோமீட்டர் மாஸ் பிரிவில் நார்வே வீராங்கனை 37 வயதான மரிட் ஜோர்ஜென் 1 மணி 22 நிமிடம் 17.6 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் வென்ற 5-வது பதக்கம் இதுவாகும்.

ஒட்டுமொத்த குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் ஜாம்பவான் மரிட் ஜோர்ஜெனின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அவர் தான் குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற சாதனையாளர் ஆவார். அது மட்டுமின்றி அவரது இந்த பதக்கம் தான் பட்டியலில் ஜெர்மனியை முந்துவதற்கு உதவிகரமாக இருந்தது.

ஆண்களுக்கான ஐஸ் ஆக்கி இறுதி ஆட்டத்தில் ரஷியா- ஜெர்மனி அணிகள் மல்லுகட்டின. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டன. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக் கிய போது அதில் ரஷியாவின் கிரில் கப்ரிஜோவ் கோல் அடித்தார்.

பரபரப்பான இந்த மோதலில் ரஷியா 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 26 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது. ஊக்கமருந்து விவகாரத்தால் ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்பட்டதால், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ‘ரஷியாவில் இருந்து ஒலிம்பிக் நபர்’ என்ற பொதுவான பெயரில் தான் இந்த போட்டியில் பங்கேற்றனர். பொதுவாக தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் சார்ந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால் ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்ட போது, ஒலிம்பிக் கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் அந்த சமயம் ரஷிய வீரர்கள் தங்களது தேசிய கீதத்தை உரக்கபடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

92 நாடுகள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 30 நாடுகள் மட்டுமே பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன. நார்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெள்ளி என்று மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என்று 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 4-வது இடத்தையும் பெற்றன. இந்திய தரப்பில் களம் இறங்கிய ஷிவ கேசவன், ஜெகதீஷ் சிங் இருவரும் ஏமாற்றமே அளித்தனர்.

இரவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கிராபிக்ஸ் ஜாலம், வாணவேடிக்கைகளுடன் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழா அணிவகுப்பில் தங்களது அணி வீரர்-வீராங்கனைகள் தேசிய கொடியை ஏந்திச்செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற ரஷியாவின் கோரிக்கையை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்து விட்டது. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2022-ம் ஆண்டு சீனாவில் நடக்கிறது.

Next Story