பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடக்கம்


பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 24 March 2018 9:30 PM GMT (Updated: 24 March 2018 7:34 PM GMT)

பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடங்க உள்ளது.

மெல்போர்ன்,

கார் பந்தயங்களில் மிகவும் புகழ்பெற்றது பார்முலா1 வகை கார்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் 10 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 என்ற வீதம் புள்ளிகள் வழங்கப்படும். 21 சுற்று முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் வீரர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார். இந்த முறையும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனே (மெர்சிடஸ் அணி) ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

இந்த சீசனுக்கான முதலாவது சுற்று பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி மெல்போர்ன் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதன் பந்தய தூரம் 307.574 கிலோமீட்டர் ஆகும். தகுதி சுற்றில் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றதால் அவரது கார் முதல்வரிசையில் இருந்து சீறிப்பாயும். அவருக்கு செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி), கிமி ரெய்க்கோனன் (பின்லாந்து), மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் போர்ஸ் இந்தியா அணிக்காக செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகோன் (பிரான்ஸ்) ஆகியோர் களம் இறங்க உள்ளனர்.

Next Story