பெண்கள் கபடி இறுதி ஆட்டம்: ஈரானிடம் இந்திய அணி தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது


பெண்கள் கபடி இறுதி ஆட்டம்: ஈரானிடம் இந்திய அணி தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது
x
தினத்தந்தி 24 Aug 2018 11:15 PM GMT (Updated: 2018-08-25T02:01:31+05:30)

ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் பரபரப்பான ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணி ஈரானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.

ஜகர்தா,

ஆசிய கபடி

ஆசிய விளையாட்டு போட்டியில், கபடி ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று முன்தினம் அரைஇறுதியில் ஈரானிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. அதன் மூலம் 1990-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 7 தங்கம் வென்றிருந்த இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பெண்கள் கபடியிலும் இந்தியாவுக்கு நேற்று ஈரான் ‘வேட்டு’ வைத்து திகைக்க வைத்தது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மல்லுகட்டின. தொடக்கத்தில் ஓரளவு சிறப்பாக ஆடிய இந்தியா முதல் பாதியில் 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் ஈரான் வீராங்கனைகள் ஆக்ரோஷமாக விளையாடி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆல்-அவுட் செய்ததுடன் தொடர்ந்து 6 புள்ளிகளை திரட்டிய ஈரான் 17-13 என்ற கணக்கில் முன்னிலை கண்டது. அதன் பிறகு அவர்களின் கையே ஓங்கி நின்றது. 2 நிமிடம் எஞ்சியிருந்த நிலையில், இந்திய வீராங்கனை சாக்‌ஷி குமாரி 2 புள்ளி எடுத்து இந்தியாவுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வந்தார். அப்போது இந்தியா 24-25 என்ற கணக்கில் நூலிலை வித்தியாசத்தில் பின்தங்கி இருந்ததால், பரபரப்பு எகிறியது. ஆனாலும் ஈரான் மங்கைகள் கச்சிதமாக செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்தனர்.

இந்திய அணி தோல்வி

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் ஈரான் 27-24 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியாவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டது. ஈரான் ‘ரைடர்கள்’ சேடிக் ஜபாரி, அஸ்டெ சைடிசியாபிடி இருவரும் களத்தில் மிரட்டியதுடன் தங்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடி அறிமுகம் ஆன 2010-ம் ஆண்டிலும் 2014-ம் ஆண்டிலும் இந்தியாவே வாகை சூடி இருந்தது. இந்த முறையும் தோல்வியே சந்திக்காமல் இறுதி சுற்றை எட்டிய இந்தியா, கடைசி கட்டத்தில் சொதப்பி விட்டது. தோல்வி அடைந்தாலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நடந்த ஆண்கள் இறுதி ஆட்டத்தில் ஈரான் 26-16 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை பதம்பார்த்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தது. ‘கபடி என்றாலே இந்தியா தான்’ என்ற நினைப்பை இந்த முறை ஈரான் மாற்றி காட்டி இருக்கிறது.

பயிற்சியாளர் விளக்கம்

தோல்விக்கு பிறகு இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் சீனிவாஸ் ரெட்டி கூறுகையில், ‘ஆண்கள் கபடியில் இந்திய அணி தோற்றதால் நானும், வீராங்கனைகளும் அதிர்ச்சிக்குள்ளானோம். அது தான் எங்களது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் பெண்கள் பிரிவில் எப்படியும் தங்கம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. நாங்கள் ஆட்டத்தை நன்றாகத் தான் தொடங்கினோம். முக்கியமான கட்டத்தில் எதிராளியை ஒரு முறை மடக்கி பிடிக்காமல் விட்டதன் காரணமாக ஆட்டத்தின் உத்வேகம், ஈரான் பக்கம் திரும்பியது. அது மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியில் செய்த சில தவறுகளும் பின்னடைவை ஏற்படுத்தியது. மொத்தத்தில் இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. அதே சமயத்தில் இது ஒரு நல்ல ஆட்டமாக இருந்தது. ஒரு தரப்பு ஆட்டமாக இருக்கவில்லை’ என்றார்.

ஈரான் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஷைலஜா ஜெயின். அவர் கூறுகையில், ‘நான் எந்த பரிசையும் விரும்பவில்லை. தங்கப்பதக்கத்தோடு திரும்பினால் போதும் என்று எங்களது வீராங்கனைகளிடம் கூறினேன். அதை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.’ என்றார்.


Next Story