இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம்


இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 9:43 PM GMT)

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகிறார்.

ஐதராபாத்,

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மற்றும் 2017-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகிறார். இந்த நிலையில் பி.வி.சிந்துவை, சீனாவை சேர்ந்த லீ நிங் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து லீ நிங்கின் இந்திய அமைப்பான சன்லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மகேந்திர கபூர் அளித்த பேட்டியில், ‘எங்கள் நிறுவனத்துடன் சிந்து மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. லீ நிங் நிறுவனத்துடன் அவர் 4 ஆண்டுகளுக்கு ஏறக்குறைய ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சிந்துவுக்கு ரூ.40 கோடி கிடைக்கும். எஞ்சிய தொகைக்கு அவருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். எங்களை பொறுத்தமட்டில் இந்திய வீரர்களுக்கு குறைந்த தொகை தான் வழங்கப்படுகிறது. சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் நாங்கள் நீண்ட காலம் இணைந்து செயல்பட விரும்புகிறோம். ஓய்வுக்கு பிறகும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் பயிற்சிக்கு உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தை லீ நிங் நிறுவனம் ரூ. 35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story