உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை


உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை
x
தினத்தந்தி 27 July 2019 11:38 PM GMT (Updated: 27 July 2019 11:38 PM GMT)

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.


* 3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கவுகாத்தியில் நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

* 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை போட்டி அமைப்பு குழு நீக்கியுள்ளது. துப்பாக்கி சுடுதலில் தான் இந்தியா அதிக பதக்கங்கள் குவிப்பது உண்டு. கடந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 16 பதக்கங்கள் கிடைத்தது. அதனால் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதற்கு வீரர்கள் மட்டுமின்றி இந்திய ஒலிம்பிக் சங்கமும் (ஐ.ஓ.ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பந்தயத்தை மீண்டும் சேர்க்காவிட்டால் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை புறக்கணிக்க ஐ.ஓ.ஏ முடிவு செய்துள்ளது. புறக்கணிப்பு முடிவுக்கு ஒப்புதல் தரும்படி மத்திய அரசுக்கு ஐ.ஓ.ஏ தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று கடிதம் அனுப்பினார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கிறது. அமெரிக்காவுக்கு செல்வதற்காக ‘விசா’ கேட்டு விண்ணப்பம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் அவரது ‘விசா’ நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த விஷயத்தில் தலையிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை உள்பட சர்வதேச போட்டிகளில் முகமது ஷமி விளையாடியவர் என்று அவரது சாதனைகளை பட்டியலிட்டு அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் எழுதியது. இதன் பிறகே அவருக்கு விசா கிடைத்திருக்கிறது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘27-28 வயதில் உச்சத்தில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் முதன்மையானது டெஸ்ட் போட்டி தான். அது தான் உங்களது திறமையை தீர்மானிக்கக்கூடியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தேவை’ என்று கூறியுள்ளார்.

* உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் காலெப் டிரஸ்செல், ஜாச் ஆப்பிள், மலோரி கமர்போர்ட், சிமோன் மானுல் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 3 நிமிடம் 19.40 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். 2 ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா 3 நிமிடம் 19.60 வினாடிகளில் இலக்கை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. தங்களது சாதனையை இப்போது அமெரிக்கா மாற்றி அமைத்துள்ளது. நட்சத்திர வீரர் 22 வயதான காலெப் டிரஸ்செல் நடப்பு தொடரில் கைப்பற்றிய 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

* வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்த் (தென்ஆப்பிரிக்கா), சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story