ஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்


ஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:28 PM GMT (Updated: 26 Nov 2019 11:28 PM GMT)

ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.

பாங்காக்,

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ், தென்கொரியா வீரர் ஜின் ஹயெக் ஒக்கை சந்தித்தார். இதில் இருவரும் தலா 20 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்தனர். டைபிரேக்கரில் அதானு தாஸ் 6-5 என்ற கணக்கில் ஜின் ஹயெக் ஒக்கை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ரிகர்வ் ஆண்கள் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி டைபிரேக்கரில் 6-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றது. ரிகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, பாம்பல்யா தேவி, அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பானை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 229-221 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் பெண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் ஜோதி சுரேகா, முஸ்கான் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற புள்ளி கணக்கில் ஈரானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த மூன்று பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் உலக வில்வித்தை சம்மேளன கொடியின் கீழ் பொதுவான வீரராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story