விளையாட்டுத்துறைக்கு ரூ.2,827 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு


விளையாட்டுத்துறைக்கு ரூ.2,827 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 12:02 AM GMT (Updated: 2 Feb 2020 12:02 AM GMT)

மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத்துறைக்கு ரூ.2,827 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.2,826.92 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இது முந்தைய ஆண்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். இதில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.55 கோடி குறைவாகும்.

இதே போல் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.111 கோடியில் இருந்து ரூ.70 கோடியாகவும், இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (சாய்) வழங்கப்படும் நிதி ரூ.615 கோடியில் இருந்து ரூ.500 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அடிமட்ட அளவில் திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நிதி கணிசமாக (கூடுதலாக ரூ.291.42 கோடி) அதிகரிக்கப்பட்டு இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story