ஒலிம்பிக், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை


ஒலிம்பிக், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 27 Aug 2021 7:14 PM GMT (Updated: 27 Aug 2021 7:14 PM GMT)

ஒலிம்பிக், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் காசா கிராண்டு நிறுவனம் ஆதரவுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்), ரேவதி, சுபா, தனலட்சுமி (4x400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டம்) மற்றும் கென்யாவில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தமிழ்நாட்டை சேர்ந்த பரத் ஸ்ரீதர் (விழுப்புரம்), மாற்று வீரர் நாகர்ஜூனன், டிரிபிள்ஜம்ப் போட்டியில் 4-வது இடம் பெற்ற டொனால்டு மகிமைராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்கள் மற்றும் உலக ஜூனியர் போட்டியில் பதக்கம் வென்றவருக்கு தலா ரூ.1 லட்சமும், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கினார். ஆரோக்ய ராஜீவ் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டு பரிசை பெற்றனர். வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா, உதவி தலைவர்கள் ஷைனி வில்சன், ஜி.அன்பழகன் எம்.எம்.ஏ., தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூன், தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், காசா கிராண்டு நிறுவனத்தின் இயக்குனர் சிவாசங்கர் ரெட்டி, தொழில் அதிபர்கள் மணிகண்டன், ஸ்ரீபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story