தேசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரெயில்வே வீராங்கனை நிஷா தாகியா


தேசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரெயில்வே வீராங்கனை நிஷா தாகியா
x
தினத்தந்தி 12 Nov 2021 2:26 AM IST (Updated: 12 Nov 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மல்யுத்த போட்டியில் ரெயில்வே வீராங்கனை நிஷா தாகியா தங்கப்பதக்கத்தை வென்றார்.

கோண்டா, 

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ரெயில்வே வீராங்கனை நிஷா தாகியா 30 வினாடியில் பஞ்சாப் வீராங்கனை ஜஸ்பிரித் கவுரின் காலை மடக்கி பிடித்து முடக்கி வெற்றி பெற்றதுடன், தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். 

அரியானா வீராங்கனை சங்கீதாவுக்கு எதிரான அரைஇறுதி தவிர முந்தைய சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் அவர் எதிராளியை எளிதாக வீழ்த்தினார். சமீபத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நிஷா தாகியா நேற்று முன்தினம் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெயர் குழப்பம் காரணமாக மரணம் அடைந்ததாக தவறுதலாக வெளியான பரபரப்பு செய்தியில் சிக்கியவர் என்பது நினைவுகூரத்தக்கது.

23 வயதான நிஷா தாகியா கூறுகையில், ‘இந்த போட்டியை வெற்றிகரமாகவும், நேர்த்தியாகவும் முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று (நேற்று முன்தினம்) நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன். அதனால் என்னால் சரியாக தூங்க கூட முடியவில்லை. உடல் எடையை குறைத்ததால் ஏற்கனவே எனது சக்தி குறைந்து இருந்தது. மேலும் சூப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தவறுதலாக வெளியான செய்தியால் ஏற்பட்ட நெருக்கடியை கையாள்வது கடினமாக இருந்தது. நிச்சயமாக ஒரு வீராங்கனை தன்னை பற்றி விவாதிக்கப்படவும், பேசப்படவும் விரும்புவார். ஆனால் இதுபோன்ற வழியில் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். எனது செயல்பாட்டை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான சம்பவத்தினால் அல்ல. எனக்கு நிறைய அழைப்புகள் வந்ததை அடுத்து போட்டியில் முழு கவனத்தையும் செலுத்துவதற்காக எனது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டேன். நல்லவேளையாக அந்த சம்பவம் எனது ஆட்டத்திறனை பாதிக்கவில்லை’ என்றார்.

1 More update

Next Story