சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வு


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 17 Oct 2023 8:15 PM GMT (Updated: 17 Oct 2023 8:15 PM GMT)

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) 3 நாள் கூட்டம் மும்பையில் நேற்று நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 விளையாட்டுகளை புதிதாக சேர்க்க ஓட்டெடுப்பு மூலம் ஆதரவு அளிக்கப்பட்டது. கடைசி நாளான நேற்று அதிகாரமிக்க ஐ.ஓ.சிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் 4 பெண்களும் அடங்குவர். இதனால் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்தது. இதில் பெண்களின் எண்ணிக்கை 41.4 சதவீதம் ஆகும். ஐ.ஓ.சி.யின் கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது லட்சியம் என்று ஐ.ஓ.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்களில் எல் அராத் (இஸ்ரேல்), பாலாஸ் புர்ஜெஸ் (ஹங்கேரி), செசிலியா ரோக்சனா (பெரு), மிட்செல் யோ (மலேசியா) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் மிட்செல் யோ ஸ்குவாஷ் வீராங்கனையாக இருந்து நடிகையானவர். சிறந்த நடிப்புக்காக ஆஸ்கார் விருது பெற்ற சாதனையாளர்.

ஐ.ஓ.சி. குடும்பத்தில் இணைந்தது குறித்து 61 வயதான மிட்செல் யோ கூறுகையில், 'ஒரு முறை என்னிடம் நிருபர் ஒருவர் எப்படி நடிகையானீர்கள் என்று கேட்ட போது, நடிகை ஆக வேண்டும் என்பது எனது கனவல்ல. சிறுவயதில் இருந்தே ஒலிம்பியன் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது என்று பதில் அளித்தேன். குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டு எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது. ஸ்குவாஷ், தடகளம், நீச்சல் விளையாட்டில் பங்கேற்று இருக்கிறேன். ஸ்குவாஷ் எனக்கு பிடித்த விளையாட்டாக இருந்தது. காயத்துக்கு இரண்டு கால்முட்டியிலும் ஆபரேஷன் செய்தது பின்னடைவாக அமைந்தது' என்றார்.


Next Story