உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி
x

இந்திய இளம் வீரரான லக்‌ஷயா சென், டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காமல்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரரான லக்‌ஷயா சென் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் லூகா ராபெரை தோற்கடித்தார். இதேபோல் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 21-19 என்ற நேர்செட்டில் அயர்லாந்தின் நிகாத் நிகயேனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் 2019-ம் ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் சாய் பிரனீத் 15-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சோவ் டைன் சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் 14-21, 12-21 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னிடம் வீழ்ந்தார். பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி 21-7, 21-9 என்ற நேர்செட்டில் மாலத்தீவின் அமினாத் நபீஹா-பாத்திமா நபாஹா இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை 21-13, 21-13 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் பாட்ரிக் சியெல்-பிரான்சிஸ்கா ஜோடியை விரட்டியடித்தது.


Next Story