செஸ் ஒலிம்பியாட் போட்டி: 6 அணிகளை களம் இறக்கும் இந்தியா


செஸ் ஒலிம்பியாட் போட்டி: 6 அணிகளை களம் இறக்கும் இந்தியா
x

இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது.

சென்னை,

செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் ஓபன் பிரிவில் (வீராங்கனைகளும் ஆடலாம்) 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் அதிக அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்ற வரலாற்று சாதனையை இந்த போட்டி பெறுகிறது.

எப்போதுமே போட்டியை நடத்தும் நாடுகள் கூடுதலாக அணியை சேர்க்க அனுமதி உண்டு. இதன்படி இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது.

ஓபன் பிரிவில் இந்தியா 1 அணியில் விதித் குஜராத்தி, ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகாசி, எஸ்.என்.நாராயணன், சசிகிரண், இந்தியா 2 அணியில் நிஹல் சரின், டி.குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, ரானக் சத்வானி, இந்தியா 3 அணியில் சூர்யசேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி, அபிமன்யு புரானிக்,

பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி, இந்தியா 2 அணியில் வந்திகா அக்ரவால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி, திவ்யா தேஷ்முக், இந்தியா 3 அணியில் ஈஷா காரவடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யூஷா போட்டா, நந்திதா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஓபன் பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் கிராண்ட்மாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோரை கொண்ட இந்தியா 1 அணிக்கு போட்டி தரநிலையில் 2-வது இடமும், பெண்கள் பிரிவில் கோனோ ஹம்பி, ஹரிகா உள்ளிட்டோர் அடங்கிய இந்தியா 1 அணிக்கு போட்டித்தரநிலையில் முதலிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகள் மீதே எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்த முறை செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடவில்லை. அவர் அணிக்கு ஆலோசகராக செயல்பட இருப்பது நினைவு கூரத்தக்கது.


Next Story