'வீராங்கனைகள் போராட்டம் கவலை அளிக்கிறது' - இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளன தலைவர் கடிதம்


வீராங்கனைகள் போராட்டம் கவலை அளிக்கிறது - இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளன தலைவர் கடிதம்
x

Image Courtesy : PTI

உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நெனட் லாலோவிச், இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்ட களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையே உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நெனட் லாலோவிச், இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'இந்திய சம்மேளன தலைவருக்கு எதிராக வீராங்கனைகளின் போராட்டமும், அது தொடர்பான நிகழ்வுகளும் எங்களுக்கு கவலை அளிக்கிறது. உண்மையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தற்போது நடப்பது என்ன? இதன் அன்றாட பணிகளை நிர்வகிப்பது யார்? என்பதை எங்களுக்கு துல்லியமாக தெரியப்படுத்த வேண்டும். இதை செய்ய தவறினால் சம்மேளனம் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது' என்று கூறியுள்ளார். கடிதத்தின் நகல் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Next Story