'ஒலிம்பிக் தகுதி சுற்றில் கவனம் செலுத்துகிறேன்' - இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி


ஒலிம்பிக் தகுதி சுற்றில் கவனம் செலுத்துகிறேன் - இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
x

கோப்புப்படம்

ஒலிம்பிக் தகுதி சுற்றில் கவனம் செலுத்துகிறேன் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் மிகப்பெரிய போட்டியான தேசிய விளையாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் விட்டது, உண்மையிலேயே இந்த போட்டியை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. தற்போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஏறக்குறைய குணமடைந்து விட்டேன். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். விரைவில் பயிற்சியை தொடங்கி களம் திரும்புவேன்.

பேட்மிண்டனில் தற்போது இந்தியாவில் நிறைய திறமையான இளம் வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள். அதனால் 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் கூடுதல் பதக்கங்களை எதிர்பார்க்கிறோம். பேட்மிண்டன் மட்டுமல்ல ஒவ்வொரு விளையாட்டிலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு கடுமையான உழைப்பும், முழு உடல்தகுதியுடன் இருப்பதும் முக்கியம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எளிதானது அல்ல.

என்னை பொறுத்தவரை தொடர்ந்து 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருப்பதில் கவனம் செலுத்துகிறேன். அடுத்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிக்கான தகுதி சுற்று தொடங்குகிறது. அதன் பிறகு ஒவ்வொரு தொடர்களும் முக்கியமானது. தரவரிசையில் டாப்-16 இடத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் அதற்கு ஏற்ப முழு வீச்சில் தயாராக வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு சிந்து கூறினார்.

ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதான சிந்து தரவரிசையில் தற்போது 6-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story