தேசிய அளவிலான போட்டிக்கு முன்... வீராங்கனையின் வீடு புகுந்து கைத்துப்பாக்கியை திருடி சென்ற மர்ம ஆசாமிகள்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் வீராங்கனையின் கைத்துப்பாக்கியை வீடு புகுந்து மர்ம ஆசாமிகள் திருடி சென்ற அவலம் நடந்து உள்ளது.
லக்னோ,
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இன்று (ஜூன் 3-ந்தேதி) முதல் தொடங்கி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்த போட்டியில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரியா திவாரி கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகருக்கு உட்பட்ட பி.ஜி.ஐ. காவல் நிலைய பகுதியில் பிருந்தாவன் காலனியில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் அவரது கைத்துப்பாக்கியை திருடி சென்று உள்ளனர்.
இதுபற்றி அவரது சகோதரர், பிரதீப் குமார் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில், பிரியாவின் அறை முதல் தளத்தில் உள்ளது. மொத்த குடும்பமும் தரை தளத்தில் கடந்த வியாழ கிழமை இரவில் படுத்து உறங்கியது.
இந்நிலையில், திருடர்கள் பால்கனி வழியே முதல் தளத்திற்குள் புகுந்து, பிரியாவின் ஏர் கன் வகை கைத்துப்பாக்கி, லேப்டாப் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பிற பொருட்களை திருடி சென்று உள்ளனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
பிரியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் குடும்பத்தினரை வருத்தமடைய செய்து உள்ளது. கைத்துப்பாக்கி இல்லாமல் அவர் எப்படி போட்டியில் கலந்து கொள்வார்? போட்டி அமைப்பாளரிடம் நடந்த விவரங்களை கூறி உள்ளோம்.
வேறு சிலரின் கைத்துப்பாக்கியை பயன்படுத்த அனுமதிக்கும்படி வேண்டுகோளாக கேட்டு உள்ளோம். இதனால், குறைந்தபட்சம் அவர் போட்டியில் பங்கேற்கவாவது முடியும் என சகோதரர் பிரதீப் கூறியுள்ளார்.






