பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து
அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் , வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
இந்த நிலையில் அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அவனி லேகரா அவர்களுக்கும் அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மோனா அகர்வால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்திய வீராங்கனைகள் அவனி லேகரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.