இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை - மத்திய அரசு உத்தரவு


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை - மத்திய அரசு உத்தரவு
x

இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 18-ந் தேதி திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

பிரிஜ் பூஷன் ஷரண்சிங் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்று வற்புறுத்திய மல்யுத்த வீரர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் இரவு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று அதிகாலை முடிவு எட்டப்பட்டது.

மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மேற்பார்வை கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டி 4 வாரத்துக்குள் விசாரணை நடத்தி தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் ஷரண்சிங் விலகி இருப்பார் என்றும், சம்மேளனத்தின் அன்றாட நிர்வாகத்தை மேற்பார்வை கமிட்டி கவனிக்கும் என்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் உறுதி அளித்தார். இதை ஏற்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் மேற்பார்வை கமிட்டி அமைக்கப்பட்டு அதன் விசாரணை தொடங்கும் வரை, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நடப்பு தரவரிசைப் போட்டியின் இடைநிறுத்தம் மற்றும் நடப்புச் செயல்பாடுகளுக்கு பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி வழங்குவது ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story