நீதிக்கான எங்களது போராட்டத்தில் முதல் நடவடிக்கை; இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவு பற்றி பஜ்ரங் பூனியா பரபரப்பு பேட்டி


நீதிக்கான எங்களது போராட்டத்தில் முதல் நடவடிக்கை; இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவு பற்றி பஜ்ரங் பூனியா பரபரப்பு பேட்டி
x

நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைமை மற்றும் அதன் தலைவவரான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடங்கிய போராட்டம் 3 வாரங்களை கடந்து தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் புதிதாக கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் அன்றாட நடவடிக்கைகளை கவனித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 12-ந்தேதியிட்ட கடிதத்தில், நிதி சார்ந்த விசயங்கள் உள்ளிட்ட அலுவல்பூர்வ ஆவணங்கள் எல்லாவற்றையும் தனது கண்காணிப்பு குழுவிடம் ஒப்படைக்கும்படி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பொது செயலாளரிடம் அந்த அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.

இதனால், அந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு கூட்டமைப்பை நடத்தும் பணியில் எந்த பங்கும் இருக்காது என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்று கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இன்று கூறும்போது, பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான போராட்டத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கான பொறுப்புகளை எடுத்து கொள்ளும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முடிவானது எங்களது போராட்டத்திற்கான முதல் நடவடிக்கை என கூறியுள்ளார்.

எங்களது போராட்டம் சரியான கருத்தூன்றுதலுடன் தொடங்கியது. இது எங்களுக்கான வெற்றி. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அல்லது நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவரான வினேஷ் போகத் கூறும்போது, ஆளுங்கட்சியின் நாடாளுமன்றவாதி ஒருவர் கூட, மல்யுத்த வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து, மகளிரின் கண்ணியத்திற்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என வருத்தம் வெளியிட்டார்.


Next Story