உலக பேட்மிண்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் 2023; இந்திய அணி அறிவிப்பு..!!


உலக பேட்மிண்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் 2023; இந்திய அணி அறிவிப்பு..!!
x

உலக பேட்மிண்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டிற்கான இந்திய அணியை இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலக பேட்மிண்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்போகன் நகரில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் 16 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணியை, இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற முழுமையான பயிற்சி சோதனை மூலம் அணித்தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அணித்தேர்வு குறித்து இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் பொதுச்செயலர் சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், 'அணியை தேர்வு செய்தது சவாலாக அமைந்தது. ஏராளமான புதுமுக வீரர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டனர். தேர்வு செய்துள்ள வீரர்,வீராங்கனைகள் மீது அதிகபடியான நம்பிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் அவர்கள் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்' என கூறினார்.

இந்திய பெண்கள் ஒற்றையர் பிரிவு அணியை 2022ஆம் ஆண்டின் ஒடிசா ஓபன் சாம்பியனான உன்னடி ஹூடா வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் தாரா ஷா மற்றும் தேவிகா சிகாங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அணியை 2 முறை இந்திய ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற ஆயுஷ் ஷெட்டி வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் துஷார் சுவீர் மற்றும் லோகேஷ் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு அணியில் நிக்கோலஸ் நாதன் ராஜ்-துஷார் சுவீர் இணை மற்றும் திவ்யம் ஆரோரா-மயன்க் ராணா இணை இடம் பெற்றுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ராதிகா சர்மா-தன்வி சர்மா இணை மற்றும் வென்னலா கே-சிரியான்ஷி வலிஷெட்டி இணை இடம் பெற்றுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சமர்வீர்-தன்வி சர்மா மற்றும் சாத்விக் ரெட்டி கே-வைஷ்ணவி காட்கேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரின் முதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒற்றையர் பிரிவு போட்டிகள் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தொடங்க உள்ளன.


Next Story