மும்பை டெஸ்ட்; நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!


மும்பை டெஸ்ட்; நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
x
தினத்தந்தி 6 Dec 2021 5:18 AM GMT (Updated: 6 Dec 2021 5:54 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கியது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் மயங்க் அகர்வால் 62 ரன்களுக்கும் புஜாரா 47 ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் கோலி  டிக்ளேர் செய்தார். 

நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

அந்த அணி வீரர்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள்  எடுத்திருந்தது.

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே  நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. 

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக  மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில்  எதிரணியை வீழ்த்தி உள்ளது.

இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்சில், அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர். அக்சர் பட்டேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் என்று இந்த டெஸ்டில் மொத்தம் 225 ரன்கள் வழங்கி 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். 

முன்னதாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story