கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் கங்குலியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நேற்று(டிசம்பர் 27) மாலை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு ‘மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி’ (Monoclonal antibody cocktail therapy) எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது 49 வயதாகும் கங்குலி, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார். அண்மைக் காலமாக பல்வேறு பணி சார்ந்த பயணங்களை மேற்கொண்டு வந்த அவருக்கு, நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு இதோடு 3-வது முறையாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 2 வாரங்கள் கழித்து மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், 2-வது சுற்று ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டெண்ட் கருவி பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story