ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் 2-வது ஒருநாள் போட்டி: பாபர் அசாம், இமாம்-உல்-ஹக் சதம் விளாசி அசத்தல்


ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் 2-வது ஒருநாள் போட்டி: பாபர் அசாம், இமாம்-உல்-ஹக் சதம் விளாசி அசத்தல்
x
தினத்தந்தி 31 March 2022 8:09 PM GMT (Updated: 31 March 2022 8:09 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர்,

பாகிஸ்தான் -ஆஸ்திரேலியாஅணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. 

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. தனது முதலாவது சதத்தை அடித்த பென் மெக்டெர்மோட் 104 ரன்கள் (108 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். டிராவிஸ் ஹெட் (89 ரன், 70 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), லபுஸ்சேன் (59 ரன்) அரைசதம் அடித்தனர். 

பின்னர் 349 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 45 ஓவர் முடிந்திருந்தபோது 3 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனையை படைத்த பாபர் அசாம் 114 ரன்களில் கேட்ச் ஆனார்.

மறுபுறம் இமாம்-உல்-ஹக், 97 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார். இறுதியாக பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 352 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. 

Next Story