போலீசாருக்கு 10 கட்டளைகள்


போலீசாருக்கு 10 கட்டளைகள்
x

10 கட்டளைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஆதிகாலத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாய் மலையில் இறைவன் மோசே என்ற யூதரிடம் பொய் சொல்லாதிருப்பாயாக! களவு செய்யாதிருப்பாயாக! என்பது போன்ற 10 கட்டளைகளை நேரில் முகமுகமாய் கூறியதாக கூறப்பட்டுள்ளது. அதனால்தான் இப்போதும் 10 கட்டளைகள் என்று பல உத்தரவுகள் பல்வேறு விவகாரங்களில் பிறப்பிக்கப்படுகிறது.

அதேபோன்ற 10 கட்டளைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர போலீசாருக்கு வழங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளின் வருடாந்திர 2 நாட்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நிலைமைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். 'தினத்தந்தி'யின் அனைத்து பதிப்புகளிலும் இந்த மாநாட்டில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைகள் குறித்து என்ன விவாதிக்கப்பட்டது என்று மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளிடம் சிறப்பு பேட்டி எடுத்து பிரசுரிக்கப்பட்டது.

அந்தவகையில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் எடுத்த பேட்டியில், சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 10 கட்டளைகளை அவர் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை உயிர்மூச்சாக வைத்து போலீசார் செயல்பட வேண்டும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை நிலைநாட்டுவதை இலக்காக வைத்திருக்க வேண்டும், பொது அமைதியைக் கெடுப்பவர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை தடுக்க வேண்டும், குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுபவர்களை கண்காணித்து தடுக்க வேண்டும், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும், போதை பொருள் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், சாலை விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதுபோன்ற 10 கட்டளைகளை வெளியிட்டுள்ளார்.

இதுபோல செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான கள ஆய்வு கூட்டத்திலும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசும்போதும், பல உத்தரவுகளை அடுக்கடுக்காக அறிவித்தார். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்தும் குறிப்பாக ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்; குற்றங்கள் நடைபெறாமல் அமைதிபூங்காவாக திகழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் பேசினார். எங்கள் மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டம் இல்லை என்று ஒவ்வொரு மாவட்ட போலீஸ் அதிகாரியும் உறுதி எடுத்து தடுத்துக்காட்ட வேண்டும். ஏனென்றால் இது உங்கள் வேலை மட்டுமல்ல, உங்களுடைய கடமை என்பது போன்ற பல கருத்துகளை அழுத்தமாக கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய இந்த கருத்துகள் அந்த மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்துவதாகும். எனவே அனைத்து மாவட்டங்களும் இதை நிறைவேற்ற உள்துறை முதன்மை செயலாளரும், டி.ஜி.பி.யும் உத்தரவிட வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தால்தான் மக்கள் அமைதியோடு வாழ முடியும். அமைதிப்பூங்காவாக இருக்கும் மாநிலத்தில்தான் தொழில் முதலீடுகள் வரும் என்ற வகையில், போலீசாரின் பணிதான் அதை உருவாக்க முடியும். மக்களின், மாநிலத்தின் நிம்மதி போலீசாரிடம்தான் இருக்கிறது.


Next Story