முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம்!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம்!
x

பேரறிவாளன் விடுதலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரமும், சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு முன்வைத்து வாதிட்ட அழுத்தமான கருத்துகளுமே காரணம்.

பல ஆண்டுகளாக நடக்கும் போரின் இறுதியில் வெற்றி கிடைத்தது என்றால், அந்த படையை தலைமை தாங்கி போரிட்ட தளபதியின் வீரதீரமும், ராஜதந்திரமும், மதிநுட்பமும், திட்டமிடுதலும், போரிட்ட வீரமும்தான் காரணம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். அந்தவகையில், பேரறிவாளன் விடுதலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரமும், சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு முன்வைத்து வாதிட்ட அழுத்தமான கருத்துகளுமே காரணம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், "ராஜீவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும்" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். 'அவர் எப்போதும் சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்' என்பதை உறுதிப்படுத்துவதுபோல, ஆட்சி அமைந்தவுடனேயே இதற்கான முயற்சிகளை கையில் எடுத்தார். "சட்டம் ஒரு இருட்டறை. வக்கீலின் வாதம் அதில் விளக்கு" என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிட தலைசிறந்த சட்டநிபுணர்களை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வாய்தாவின்போதும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் வாதங்கள் குறித்து என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வழிகாட்டினார். முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பதில் மனு தயாரிக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் மிகச்சிறந்த சட்டநிபுணரான ராகேஷ் திவேதி வாதாடும்போது, "அரசியல் சட்டம் 161-ல் இருந்து 163 வரை இருக்கிற பிரிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சு, கவர்னரின் அதிகாரத்தை ஏற்கனவே தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படி, அரசியல் சட்டத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டாலொழிய அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். அமைச்சரவை முடிவு மீதான மறுஆய்வோ, மறுபரிசீலனையோ செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சட்டத்தின் எந்தப்பிரிவும் அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திட கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. அப்படி செய்யப்பட்ட செயல் இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். கூட்டாட்சி தத்துவமே இந்திய அரசியல் சட்டத்தின் அடிநாதமாகும். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது. இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவு மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ்வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் போதுமானது, அவர் புதிய முடிவு எடுக்க தேவையில்லை. தமிழக அரசு முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப தேவையில்லை" என்று அழுத்தமாக வாதிட்டார். மேலும், இந்த வாதம் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுவதாகவும் அமைந்து இருந்தது.

தமிழக அரசின் இந்த கருத்துகள் அப்படியே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எதிரொலித்தது. 'ஒரு கல்லில் இரு மாங்காய்' என்பதுபோல, பேரறிவாளன் விடுதலை மட்டுமல்லாமல், தமிழக அரசின் உரிமைகளும் இந்தத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். ஜனாதிபதிக்கு அனுப்பியது சரியல்ல. அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் தாமதம் செய்தால், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்பது போன்ற சுயாட்சி தத்துவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினால் பேரறிவாளன் விடுதலையில் கிடைக்கும் மகிழ்ச்சி தமிழ்நாட்டுக்கு என்பது ஒருபக்கம் இருக்க, மாநில உரிமைகளை காப்பாற்றிக் கொடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த தீர்ப்பினால் பயன்பெறப்போகும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் போற்றி பாராட்டும். வரலாற்றில் இந்த வெற்றி, அரும்பெரும் சாதனை, அழிக்க முடியாத முத்திரையாக இருக்கும்.


Next Story