போ! திரும்பி வராதே கொரோனா!


போ! திரும்பி வராதே கொரோனா!
x

கொரோனா இனி டெங்கு, புளு காய்ச்சல், மலேரியா, சின்னம்மை போல, எப்போதாவது வரும் தொற்றுபோல தன் கரங்களை நீட்ட வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. முககவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற உத்தரவு இப்போது நடைமுறையில் இல்லை. முககவசம் அணியாமல் வரவேண்டாம் என்று இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் சொல்வதில்லை. சானிடைசர்களையும் எங்கும் காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் யாராவது ஒருவர் முககவசம் அணிகிறார்கள். தமிழ்நாட்டில் ஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த ஒரு என்ஜினீயருக்கு முதலாவதாக கொரோனா இருந்தது, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு, அலை அலையாய் கொரோனா பரவத்தொடங்கியது. 25-ந்தேதி அன்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி, முதல் அலையில் அதிகபட்சமாக 6,993 பேர் பாதிக்கப்பட்டனர். ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மட்டும் அதிகபட்சமாக 127 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2-வது அலை தொடங்கி தன் கோர தாண்டவத்தை ஆடி பாடாய்படுத்திவிட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஏன் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்களிலும்கூட சிறப்பு கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு நிரம்பி வழிந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது பெரும் கஷ்டமாக இருந்தது.

இதுமட்டுமல்லாமல், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தினமும் கொத்து கொத்தாய் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. ரெயில், பஸ், விமானப் போக்குவரத்து இல்லை. அதிகபட்சமாக 2021-ம் ஆண்டு மே 21-ந்தேதி மட்டும் 36,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்தமாதம் 30-ந்தேதி மட்டும் 493 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 3-வது அலை ஆட்டமும் பயங்கரமாக இருந்தது. தடுப்பு ஊசிகள், பூஸ்டர் டோஸ், முககவசம், சமூக இடைவெளி ஆகிய கவசங்களால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 94 ஆயிரத்து 159 ஆகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 49 ஆகும். மனநிறைவு தரும் செய்தியாக நேற்று தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 தான். ஆக, கொரோனா டாட்டா காட்டிவிட்டு போய்விடும் நிலை உருவாகிவிட்டது.

ஆனாலும் கொரோனா இனி டெங்கு, புளு காய்ச்சல், மலேரியா, சின்னம்மை போல, எப்போதாவது வரும் தொற்றுபோல தன் கரங்களை நீட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் யாருக்கும் பயம் வேண்டாம். ஏனெனில் உருமாற்றம் அடைந்து வீரியமான வைரஸ் வந்தால், உடனடியாக கண்டுபிடிக்கும் சோதனை வசதியும், எங்காவது கொத்து கொத்தாய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் இணையதளமும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் இருக்கிறது என்கிறார்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகமும். என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சற்றும் தொய்வு இல்லாமல் மக்கள் இருந்தால், 'ஓடிப்போ கொரோனா.. திரும்ப எட்டிப்பார்க்காதே..' என்று ஒழித்துவிட முடியும். இன்னும் கொஞ்ச காலத்துக்கு முககவசம் அணிவதில் தவறு ஒன்றும் இல்லையே! தமிழ்நாட்டில் இன்னும் தமிழக அரசிடம் தடுப்பு ஊசிகள் கையிருப்பில் உள்ளன. பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.


Next Story