ஜி-20 இப்போது ஜி-21 !


ஜி-20 இப்போது ஜி-21 !
x

ஜி-20 அமைப்பில் இப்போது 24 நாடுகள் உள்ளன. 55 நாடுகளைக்கொண்ட ஆப்பிரிக்க யூனியனும் ஜி-20 அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக ஜி-20 இப்போது ஜி-21 ஆகிவிட்டது.

கடந்த 9,10-ந் தேதிகளில் டெல்லி நகரமே ஜி-20 மாநாட்டால் விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஏதோ கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல், இந்த நாடுகள் அனைத்தும் அடுத்து முன்னெடுத்து செல்லப்போகும் வகையில், பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. 1999-ல் தான் ஜி-20 என்ற அமைப்பு உருவானது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இதில் உறுப்பு நாடுகளாகும்.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஜி-20 நாடுகளின் பங்களிப்பு 85 சதவீதமாகும். இதுபோல உலகளாவிய மொத்த வர்த்தகத்தில் இதன் பங்கு 75 சதவீதமாகும். உலகின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நாட்டு குடிமக்கள்தான். ஆக, உலகின் எந்த பிரச்சினை என்றாலும், அது இந்த நாடுகள் எடுக்கும் முடிவை வைத்தே தீர்வு காணமுடியும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைமைத்துவத்தில் இந்த ஜி-20 அமைப்பு இயங்கும். இந்த ஆண்டின் தலைமைத்துவம் இந்தியாவுக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன.

டெல்லியில் நடந்த மாநாட்டில் 83 பத்திகள் கொண்ட ஒரு பிரகடனம் இந்தியாவால் தயாரிக்கப்பட்டு, முந்தைய நாள் இரவு வந்திருந்த அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அதன் வரைவு அனுப்பப்பட்டது. ஒரு நாடு அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அந்த பிரகடனத்தை வெளியிடமுடியாது. ஆனால், இந்தியா தயாரித்த அந்த பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதால், மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் அது வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டின் மையப்பொருள் வசுதெய்வ குடும்பகம், அதாவது ஒரே பூமி - ஒரே குடும்பம்- ஒரே எதிர்காலம் என்பதுதான்.

அதை மையமாக வைத்தே டெல்லி பிரகடனம் அமைந்து இருந்தது. ஜி-20 அமைப்பில் இப்போது 24 நாடுகள் உள்ளன. இப்போது தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில், ஒரு உறுப்பினராக இருக்கும் நேரத்தில், 55 நாடுகளைக்கொண்ட ஆப்பிரிக்க யூனியனும் ஜி-20 அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக ஜி-20 இப்போது ஜி-21 ஆகிவிட்டது. ஆப்பிரிக்க யூனியனின் மக்கள்தொகை 140 கோடியாகும். 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை கொண்டது. உலகில் மிக வேகமாக முன்னேறும் 12 நாடுகளில் 6 நாடுகள் இந்த ஆப்பிரிக்க யூனியனில்தான் இருக்கிறது.

உலகில் உள்ள மொத்த கோபால்ட், மக்னீசியம் கனிம வளங்களில் 50 சதவீதமும், கிராபைட், தாமிரம், நிக்கலிலும் கணிசமான அளவு இந்த நாடுகளில்தான் கிடைக்கிறது. வர்த்தக ரீதியிலும் ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் பங்கு அதிகம். அத்தகைய ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பின் கீழ் கொண்டுவந்த பெருமை பிரதமர் நரேந்திரமோடியையே சேரும். அவர்தான் இந்த மாநாடு தொடங்கும்போது தலைவர் என்ற முறையில், ஆப்பிரிக்க யூனியனையும் நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டு, சம்பிரதாயப்படி இருக்கையில் அமர செய்தார். மொத்தத்தில், ஜி-20 மாநாடு இந்தியாவுக்கு புகழ் சேர்த்ததும், காலாகாலமாக பேசக்கூடியதாகவும், மிகவும் வெற்றிகரமாகவும், சிறப்புக்குரியதாகவும் அமைந்துவிட்டது.


Next Story