இளைய சமுதாயத்துக்கு ஓட்டு போட ஆர்வம் குறைந்துவிட்டதா?


இளைய சமுதாயத்துக்கு ஓட்டு போட ஆர்வம் குறைந்துவிட்டதா?
x

நாளைய சமுதாயத்தை உருவாக்கப்போகும் இந்த வயதினருக்கு, ஜனநாயக கடமையை உணர்த்தி, வருகிற 25, 26-ந்தேதிகளில் நடக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் அவர்கள் பெயரை சேர்க்க ஏற்பாடு செய்வதை அதிகாரிகளும், பெற்றோரும், ஆசிரியர்களும் ஒரு சவாலாக மேற்கொண்டு முயற்சிசெய்யவேண்டும்.

இந்தியா தலைசிறந்த ஜனநாயக நாடு. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதுபோல தேர்தல்களில் ஓட்டுபோடும் வாக்காளர்களைக் கொண்ட பட்டியல் முன்பு ஜனவரி மாதம் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியானவர்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்டுக்கு 4 முறை அதாவது, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1-ந்தேதிகளில் 18 வயது பூர்த்தியானவர்களைக் கொண்டு மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க, முகவரியை மாற்ற, திருத்தங்களை செய்ய இந்த 4 சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். முன்பு 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்ற நிலை, இப்போது மாற்றப்பட்டு, 17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 18 வயதானவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சமீபத்தில் 1-1-2024-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்களைக்கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 68 ஆயிரத்து 610-ம், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 571 ஆகும். 18 வயது முதல் 19 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரத்து 909 தான்.

அரசாங்கத்தை தீர்மானிப்பதில் பெரும்பங்கு இளைய சமுதாயத்திடம்தான் இருக்கிறது என்பதற்கு மாறாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கைகளில்தான் இருக்கிறது என்ற நிலை வந்துள்ளது. காரணம், வாக்காளர்களில் அதிக எண்ணிக்கையில் 40 வயது முதல் 49 வயது வரையில் உள்ளவர்களே இருக்கிறார்கள். இந்த வயதுவரம்பில் ஒரு கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 488 பேர் உள்ளனர். அடுத்து 50 வயது முதல் 59 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 171 அகும். இதுபோல அதற்கு மேற்பட்ட வயதினரும் கணிசமாக இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், 100 முதல் 109 வயதுள்ள வாக்காளர்கள் 15 ஆயிரத்து 788 பேரும், 110 வயது முதல் 119 வயது வரை உள்ளவர்கள் 381 பேரும், 120 வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேரும் இருக்கிறார்கள்.

18 வயது இப்போது பூர்த்தியானவர்களை எடுத்துக்கொண்டால், உத்தேச மக்கள்தொகையைவிட மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் 41 ஆயிரத்து 67 பெயர்கள்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதேநிலைதான் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. நாளைய சமுதாயத்தை உருவாக்கப்போகும் இந்த வயதினருக்கு, ஜனநாயக கடமையை உணர்த்தி, வருகிற 25, 26-ந்தேதிகளில் நடக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் அவர்கள் பெயரை சேர்க்க ஏற்பாடு செய்வதை அதிகாரிகளும், பெற்றோரும், ஆசிரியர்களும் ஒரு சவாலாக மேற்கொண்டு முயற்சிசெய்யவேண்டும்.


Next Story