சினிமாவிலும், அரசியலிலும் இவர் கேப்டன்!


சினிமாவிலும், அரசியலிலும் இவர் கேப்டன்!
x

உழைப்பால் உயர்ந்து மனிதநேயத்தால் வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்துவிட்டார்.

உழைப்பால் உயர்ந்து மனிதநேயத்தால் வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்துவிட்டார். 'கேப்டன்' என்று அன்போடு அழைக்கப்படும் அவர், சினிமாவிலும், அரசியலிலும் கேப்டனாகவே இருந்தார். கறுப்பு நிறம் கொண்டவர்களும் சினிமா உலகத்தில் கொடி கட்டி பறக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய நடிகர்களில் ரஜனிகாந்த்துக்கு அடுத்து சாதித்து காட்டியவர்.

அரசியலிலும், சினிமாவிலும் பேச்சாலும் சரி, வீரத்தாலும் சரி எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். சட்டசபையிலும், பொதுமேடைகளிலும் அவர் பேசும்போது சிங்கம் போன்ற கர்ஜனை இருக்கும். எம்.ஜி.ஆரைப்பார்த்து சினிமாவுக்கு வந்த அவருக்கு எம்.ஜி.ஆரின் பல குணங்கள் இருந்தன. குறிப்பாக யாரைப் பார்த்தாலும் சாப்பிடுங்க என்று அழைத்து சாப்பிட வைக்கும் தயாள மனம் கொண்டவர் என்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர். நல்ல நடிகர், அரசியல்வாதி என்பதற்கு மேலாக நல்ல மனிதர் என்று எல்லோராலும் போற்றி புகழப்படுபவர். நல்ல தமிழ்பற்று மிக்கவர்.

71 வயதான விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி ஒரு அரிசி ஆலை உரிமையாளருக்கு மகனாக பிறந்த விஜயராஜூக்கு, எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அவர் படங்களை அடிக்கடி பார்த்து விஜயராஜூக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல தீராத வெறி இருந்தது. அதை போராடி வென்றார்.

1979-ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். அப்போது புகழ் உச்சிக்கு சென்று கொண்டிருந்த ரஜனிகாந்த் பெயர் போல, தனது விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார். நலிந்த கலைஞர்களுக்கும், உதவி தேடி வருபவர்களுக்கும் நிறைய உதவிகள் செய்யும் இரக்க மனம் கொண்டவர்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அதிக அன்பும், மரியாதையும் கொண்டிருந்ததால், 1991-ம் ஆண்டில் தன்னுடைய 100-வது படத்துக்கு 'கேப்டன் பிரபாகரன்' என்று பெயர் வைத்தார். இதுமட்டுமல்லாமல், தன் மகனுக்கும் பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதுவரை 'புரட்சி கலைஞர்' விஜயகாந்தாக இருந்த அவர் 'கேப்டன்' விஜயகாந்த் ஆனார். ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து பெரிய சாதனையை படைத்தார். 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அரசியலில் தீவிர ஆர்வம் கொண்ட விஜயகாந்த், 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். தன் கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என பெயரை அறிவித்தார். அடுத்த ஆண்டே சட்டசபை தேர்தலில் குதித்து, 8.33 சதவீத வாக்குகளை குவித்து, பிற பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மீண்டும் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.

தர்மம் செய்து வாழ்ந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும், அரசியலிலும் போராடியே வென்று வந்த அவர், இறுதி நாட்களிலும் மரணத்தோடு பெரும் போராட்டத்துக்கு பிறகே மறைந்துள்ளார். தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் மீது தனிப்பாசம் கொண்டிருந்தவர். அவர் மிகுந்த அன்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போலவே டிசம்பர் மாதத்தில் இறந்துள்ளார். சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் விஜயகாந்தின் பெயரும், புகழும் என்றென்றும் நிலைத்து இருக்கும்.


Next Story