ஒண்டி வீரன் நினைவு நாள்


ஒண்டி வீரன் நினைவு நாள்
x

நெல்லை சீமையில் பிறந்து ஆங்கிலேயரை நடுநடுங்க, கிடுகிடுக்க வைத்து 1771-ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளான இன்று, பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபம் அருகில் நடக்கும் விழாவில், அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை மத்திய அரசாங்கம் மிகவும் சீரும் சிறப்புமாக நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்போடும், மாநில அரசுகளின் துணையோடும் கொண்டாடி வருகிறது. சும்மா கிடைத்ததல்ல இந்த சுதந்திரம். எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களால்தான் கிடைத்தது. தங்களைப் பற்றியோ, தங்கள் குடும்பங்களைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல், அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் பலர் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர், எண்ணற்றவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறைச்சாலைகளில் அடைபட்டு கடும் சித்ரவதைகளுக்கு ஆளாகி கை, கால்களை இழந்தவர்களும் உண்டு. இன்னுயிரை நீத்தவர்களும் உண்டு. வ.உ.சி. போல சிறையில் செக்கிழுத்த நிலைபோல பல கொடுமைகளை அந்த தியாகிகள் அனுபவித்து சுதந்திரம் வாங்கித்தந்ததால்தான், இன்று இந்தியா உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடாக திகழ்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் கிராம பஞ்சாயத்து முதல் மாநில, மத்திய அரசாங்கங்களில் நடக்கிறது. 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை நாடு கொண்டாடும் இந்த நேரத்தில் சுதந்திரம் வாங்கித்தந்த வீரர்களை மத்திய-மாநில அரசுகள் கவுரவித்து வருகின்றன. பலருடைய தியாகம் மக்களுக்கு தெரிகிறது. 'அன்சங் ஹீரோ'க்கள் என்று அழைக்கப்படும் அறியப்படாத வீரர்களை மக்கள் அறியும் வகையில், அவர்கள் நினைவுகளைப் போற்றும் கவுரவங்களையும் மத்திய அரசாங்கம் அளித்து வருகிறது. அப்படிப்பட்ட வீரர்கள் சரித்திரத்தில் இடம் பெறாவிட்டாலும், மக்களுக்கு தெரியாமல் இருந்தாலும், இப்போது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவர்களின் நினைவுகள் போற்றப்படுகிறது.

அந்த வகையில், நெல்லை சீமையில் பிறந்து ஆங்கிலேயரை நடுநடுங்க, கிடுகிடுக்க வைத்து 1771-ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளான இன்று, பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபம் அருகில் நடக்கும் விழாவில், அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது. இந்த தபால் தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொள்கிறார். இந்த பெருமைமிகு நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரிகள் தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், நாராயணசாமி, எல்.முருகன், தமிழக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு 2011-ல் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு மணிமண்டபம் கட்டப்பட்டு, 2016-ல் ஜெயலலிதாவால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. சீறிவரும் குதிரை மீது ஒண்டிவீரன் வீராவேசமாக அமர்ந்து, அக்னி பார்வையோடு வாளை சுழட்டிக்கொண்டு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த சிலை, பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

தென் தமிழகத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக வீர முழக்கமிட்ட மாவீரரான சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் முத்துவீரன். ஆனால் வீரம் செறிந்த மன்னர் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய நேரத்தில், தனி ஒருவனாக, ஒண்டியாக எதிரிகளின் படைகளை துவம்சம் செய்ததால் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டார்.

1755-ம் ஆண்டு நெல்லை சீமையில் வரி வசூல் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியோடு பல ஊர்களில் நடந்த போரில், ஆக்ரோஷமாக போரிட்டு பல வெற்றிகளைப் பெற்ற ஒண்டிவீரன் இறுதியில் மானூரில் நடந்த போரில் வீர மரணம் அடைந்தார். இந்த மாவீரனுக்கு நினைவு தபால் தலை வெளியிடுவது மிகவும் வரவேற்புக்குரியது. ஒண்டி வீரன் வரலாற்றையும், அவரைப்போல அறியப்படாத மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வீரதீர செயல்கள் கொண்ட வாழ்க்கை குறிப்பையும் இந்த தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் தெரியவைக்க வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது.


Next Story