சந்திரனில் 'சிவசக்தி'!


சந்திரனில் சிவசக்தி!
x

"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று பாடினார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்று. அவரது கனவுகள் எல்லாம் இப்போது நனவாகின்றன. கடந்த 23-ந் தேதியன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால் பதித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது. "இந்தியா நிலவில் இறங்கிவிட்டது, நிலவில் இந்தியா தன் பெருமை கொடியை நாட்டிவிட்டது" என்பதே உலகம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் இறங்கவில்லை. பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவின் மேற்பரப்பில் ஈரப்பதம் இருப்பதையே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1 தான் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தது. சந்திரயான்-1 புகழுக்கு முக்கிய காரணம் மறைந்த பிரதமர் வாஜ்பாய்தான். அவர்தான் 2003-ம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் பேசும்போது, சந்திரயான்-1 திட்டத்தை அறிவித்தார். எனவே, இன்று இந்தியா நெஞ்சை நிமிர்த்தி சந்திரயான்-3 நிலவில் இறங்கியதை பேசுகிறது என்றால், அதற்கு சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகியவற்றை விண்ணில் செலுத்திய அனுபவம்தான் காரணம். இதற்கெல்லாம் வித்திட்டவர், வாஜ்பாய்தான் என்று நினைக்கும்போது அவருக்கு ஒரு வீர வணக்கம் செலுத்தவேண்டும்.

சந்திரயான்-3 வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், திட்ட இயக்குனரான தமிழ்நாட்டை சேர்ந்த பி.வீரமுத்துவேல், கூடுதல் இயக்குனர் கே.கல்பனா, செயலாக்க இயக்குனர் எம்.ஸ்ரீகாந்த் மற்றும் 27 துணை இயக்குனர்கள் காரணம் என்றாலும், அவர்களுக்கு உதவியாக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் போன்ற ஒரு பட்டாளமே இருந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. "அன்சங் ஹீரோயின்கள்" என்பது போல, சந்திரயான்-3-ஐ உருவாக்கி, விண்ணில் செலுத்தியதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் பங்கும் இருக்கிறது. அவர்களின் நேரடியான புகழ்மிக்க பங்களிப்பு இந்த விண்கலத்தை உருவாக்க, ஒருங்கிணைக்க, சோதனை செய்ய, விண்ணில் ஏவ, தரையில் இருந்தே அதன் நிலவு பயணத்தை கண்காணிக்க, சந்திரனில் இறங்க என்று அனைத்து பணிகளிலும் இவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, பெண் சக்தியின் வல்லமை இணையும்போது சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகிறது. சந்திரயான்-3 பெண் சக்திக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாரதத்தின் பெண்கள் இப்போது, எல்லையில்லாதது என்று புரிந்து கொள்ளப்படும் விண்ணுக்கே சவால் விடுக்கிறார்கள். சந்திரயான்-3 மொத்த முயற்சியிலும் பல பெண் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் நேரடியாக இணைந்து இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி சூட்டிய புகழாரம், நாட்டு மக்கள் அனைவரும் போடும் புகழ் மாலையாகும். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் இனி 'சிவசக்தி' என்று அழைக்கப்படும், சந்திரயான்-2 நிலவில் தனது தடங்களை விட்டு சென்ற இடம் இனி 'திரங்கா' அதாவது, 'மூவர்ண கொடி' என்று அழைக்கப்படும், சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்டு 23-ந்தேதி இனி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கது.

பெண்களுக்கும், நாட்டுக்கும், தேசியக் கொடிக்கும், விண்வெளி ஆராய்ச்சிக்கும் உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கும் அறிவிப்புகளாகவே இதை மக்கள் கருதுகிறார்கள். அனைத்து துறைகளிலும் மிளிரும் பெண்கள், விண்வெளி ஆராய்ச்சியிலும் ஒளிவிடுவது தாய்க்குலத்தின் தனிப்பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.


Next Story