அலை அலையாய் தஞ்சம் தேடி வரும் இலங்கை தமிழர்கள்

சமீப காலங்களாக இலங்கையில் இருந்து படகுகள் மூலமாக குடும்பம் குடும்பமாக பல இலங்கை தமிழர்கள், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள், இந்திய கடற்படை ரோந்து கப்பல்களின் கண்காணிப்பையும் மீறி அலை அலையாய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலங்களாக இலங்கையில் இருந்து படகுகள் மூலமாக குடும்பம் குடும்பமாக பல இலங்கை தமிழர்கள், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள், இந்திய கடற்படை ரோந்து கப்பல்களின் கண்காணிப்பையும் மீறி அலை அலையாய் வந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு வேலையும் இல்லாமல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, தாங்கமுடியாத விலைவாசி உயர்வு என்று பலமுனை தாக்குதலால் அவதிப்படும் மக்கள், இனியும் இங்கு வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்டை நாடு என்ற முறையில் இந்தியா எவ்வளவோ உதவிக்கரம் நீட்டினாலும், ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் அவ்வளவு எளிதில் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதுதான் சாக்கு என்று சீனாவும் தன் கால்களை இலங்கையில் பதித்து வருகிறது. இதுபோன்ற பல சூழ்நிலைகளால் தாய் தமிழ்நாடு நமக்கு தஞ்சம் அளிக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் பலர் தனுஷ்கோடி நோக்கி படகில் வந்துவிடுகிறார்கள். போலீசாரும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் மிக கருணையோடு அவர்களை வரவேற்று, அனைத்து உதவிகளையும் வழங்கி மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
கடந்த மாத இறுதியில் அதிகாலையில் 7 பேர் கொண்ட 2 குடும்பங்கள் படகுகளில் வந்து தனுஷ்கோடி அருகே உள்ள ஒரு மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 5 மாத கைக்குழந்தை, ஒரு வயது குழந்தை உள்பட 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் இலங்கை முல்லைத்தீவு பகுதியில் இருந்து தலைமன்னார் வந்து, அங்கு இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். படகில் கொண்டு வந்தவர்கள் தனுஷ்கோடி அருகில் மணல் திட்டு பகுதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இப்போது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து விஜயன், ரஜினி என்ற கணவன்-மனைவி தங்கள் 18 வயது மகளோடு வந்து இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடலோர காவல் படையினர் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டுவது போல இருக்கிறார்கள். வாழவே முடியாத நிலையில் விலைவாசி இமாலய உச்சத்தில் இருப்பதால் தங்கள் வீடு, உடைமைகளை விற்று படகுக்காக ஏஜெண்டுகளிடம் கொடுத்து தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வந்ததாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், வரும் இந்த படகுகளெல்லாம் இரவில்தான் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து இருள் அகலும் முன்பு கடலில் உள்ள மணல் திட்டுகளில் விட்டுவிட்டு போய்விடுகிறது. இவர்களோடு சேர்த்து தற்போது தமிழ்நாட்டுக்கு 262 பேர் வந்து இருக்கிறார்கள். தனுஷ்கோடி பகுதிக்கு இலங்கையில் இருந்து அகதிகளாய் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடுதான். ஆகவே தமிழ்நாடு அரசு கருணையோடு அவர்களுக்கு தங்கும் வசதியும், உணவும், தினசரி செலவுக்கு பணமும் கொடுக்கிறது. அவர்கள் நடமாட்டத்தை மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். சீனாவின் கட்டுப்பாட்டுக்கு போய்விடாத அளவில் இலங்கையில் நிலவும் நிலைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.சபையும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தினமும் அகதிகளை வரவேற்கும் தமிழ்நாடு அரசுக்கு, அதற்காக மத்திய அரசாங்கம் சிறப்பு நிதி தரவேண்டும்.






