உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்


உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்
x

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக்கொண்டு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

தமிழ்நாடு சரித்திர காலம் தொட்டே கல்வியில் சிறந்து விளங்கிவருகிறது. இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடிக்கப்பட்ட உலகப் பொது மறையான திருக்குறளும், மற்ற படைப்புகளுமே சான்றாகும். மகாகவி பாரதியார் கூட, "கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடினார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக்கொண்டு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனால்தான் அவர் 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என்று இன்றும் புகழப்படுகிறார்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், பள்ளிக்கூட கல்வி மட்டும் போதாது, மாணவர்களுக்கு உயர் கல்வி வேண்டும் என்ற நோக்கத்துடன், கல்லூரிகள் திறப்பதில் அதிக அக்கறை காட்டினார். எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் நிறைய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இப்படி அனைத்து முதல்-அமைச்சர்களும் கல்விக்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றியதால், இன்று தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. 163 அரசு கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 633 சுயநிதி கல்லூரிகள் உள்பட 935 கலை கல்லூரிகளும், இதே வகைகளில் 510 என்ஜினீயரிங் கல்லூரிகளும், 71 மருத்துவ கல்லூரிகளும், 496 பாலிடெக்னிக் கல்லூரிகளும், இதுபோல மற்ற தொழிற் கல்லூரிகளும் இருக்கின்றன.

இந்த கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேறிய மாணவர்களில் பெரும்பான்மையோர் உயர் கல்வியில் சேர்ந்து விடுகிறார்கள். இந்தியாவிலேயே உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. அதை சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம், உயர் கல்வி குறித்து அகில இந்திய அளவில் நடத்திய ஆய்வு முடிவுகள் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டுகிறது. 2017-18 முதல் 2021-22 வரையிலான 5 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் உயர் கல்வியில் சேர்வது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த வயது வரம்பில் 47 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து இருக்கிறார்கள்.

2021-22-ம் ஆண்டில் அகில இந்திய சராசரி 28.4 சதவீதம்தான். தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை 46.8 சதவீதமாகவும், மாணவிகள் சேர்க்கை 47.3 சதவீதமாகவும் இருக்கிறது. தமிழக அரசு இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை நிறைவேற்றிவருவதால், வரும் ஆண்டுகளில் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை இன்னும் அதிகமாகும். இந்த பெருமை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில்தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதும், மற்ற மாநிலங்களைவிட அதிகம். நிச்சயமாக இது தமிழ்நாட்டுக்கு பெருமையாகும். இதுபோல, உயர்கல்வி முடிக்கும் அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறவும், வேலைவாய்ப்புகளுக்கு உரிய தகுதிகளை பெறும் வகையில், அவர்களுடைய திறன்களை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாடத்திட்டங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.


Next Story