இது ரெயில் பயணிகளுக்கு இனிக்கும் செய்தி


இது ரெயில் பயணிகளுக்கு இனிக்கும் செய்தி
x

மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும். இதில் குறைந்த தூரம் என்றாலும் சரி, தொலைதூரம் என்றாலும் சரி, அதிக செலவில்லாமலும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய மக்கள் ரெயில் பயணத்தையே பெரிதும் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக தொலைதூரத்துக்கு செல்பவர்கள் இரவில் ரெயிலில் ஏறி படுத்து தூங்கினால், காலையில் போகவேண்டிய இடத்துக்கு போய் தங்கள் பணிகளை கவனிக்க முடியும். ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் கழிவறை இருப்பதும் அதிக வசதியாக இருக்கிறது என்ற வகையில், ரெயில் பயணத்துக்கு கடும் கிராக்கி இருக்கிறது.

பஸ், விமான பயணங்களைவிட ரெயில்களில் கட்டணம் குறைவு. சாதாரண மக்களுக்கு குளுமை வசதியில்லாத 2-ம் வகுப்பு பெட்டியும், எங்களால் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு 3 அடுக்கு, 2 அடுக்கு, முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும் இருக்கின்றன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால், திட்டமிட்டு முன்கூட்டியே டிக்கெட் எடுப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது.

120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கினாலும், பண்டிகை நாட்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கும் 10 நிமிடங்களிலேயே அனைத்து ரெயில்களிலும் விற்று தீர்ந்துவிடுகின்றன. மற்ற நாட்களிலும், அனைத்து ரெயில்களிலும் ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. அதற்குமேல் நூற்றுக்கணக்கில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்கள். எப்படியும் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தட்கல் டிக்கெட்டோ, பிரீமியம் தட்கல் டிக்கெட்டோ எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பிரீமியம் தட்கல் டிக்கெட் எடுக்கப்போனால் வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு அல்லது 4 மடங்கு அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டியது இருக்கிறது. இது சாதாரண ஏழை-எளிய மக்களால் முடியாது.

இந்தியா முழுவதும் இப்போது 10 ஆயிரத்து 748 மெயில், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்கள் ஓடுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு ரெயில்வேயில் தினமும் 346 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 299 பாசஞ்சர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இப்போது இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 800 கோடி பயணிகள் ரெயில்களில் பயணம் செய்யும் நிலை, இனி ஆயிரம் கோடியாக உயரும் நிலை ஏற்படும். இதுபோல இப்போது 60 ஆயிரம் ரெயில் பெட்டிகள்தான் இருக்கிறது. இப்போதுள்ள காத்திருப்போர் பட்டியலைக் கருத்தில்கொண்டு, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அதாவது, 2027-ம் ஆண்டுக்குள் மேலும் 3 ஆயிரம் ரெயில்களை விடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் காத்திருப்போர் பட்டியலே இருக்காது. அனைவருக்கும் பதிவுசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ரெயில் பயணிகளுக்கு இனிக்கும் செய்தியாகும்.

புது ரெயில்களுக்காக ஆண்டுக்கு 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக பயணிகள் பயணம் செய்வதால், இங்கு கூடுதல் ரெயில்கள் விடவும், அனைத்து ரெயில்பாதைகளையும் இரட்டை ரெயில்பாதைகளாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஓங்கி குரல் கொடுக்கவேண்டும். தமிழக அரசும், தெற்கு ரெயில்வேயும் வலியுறுத்த வேண்டும். எப்போது டிக்கெட் எடுத்தாலும், பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்ற நிலை வரும் அந்த நன்னாளை ரெயில் பயணிகள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.


Next Story