கொரோனா தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் முதலிடம் - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2021-04-20 09:14 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதன்படி தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இதனிடையே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏப்ரல் 11-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 லட்சம் டோஸ்களில், 44 லட்சத்து 78 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமான டோஸ்கள் வீணாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 12.10 சதவீதமும், அரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாபில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும், தெலுங்கானாவில் 7.55 சதவீதமும் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளது. குறைவான அளவில் டோஸ்கள் வீணடித்துள்ள மாநிலங்களாக கேரளா, மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் - டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முன்னதாக மாநில அளவில் வீணான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்