மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு

மராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-24 05:35 GMT
மும்பை,

மராட்டியத்தில் இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ராய்காட், தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொய்னா அணைக்கட்டில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் பல பகுதிகள் மூழ்கி உள்ளன.

இதனால் பல நகர்ப்புறங்களும், ஏராளமான கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவம், விமானப்படை, கடற்படையினரும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கடற்படையின் மிக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு என மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி நேற்று மாலை வரை 136- பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்