காங்கிரசின் அரசியல், வளர்ச்சி பணி காகிதத்தில் மட்டுமே இருக்கும்: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரசின் அரசியல் மற்றும் வளர்ச்சி பணி காகிதத்தில் மட்டுமே இருக்கும் என கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-05-07 11:25 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். கர்நாடகாவில், கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். இதுவரை 7 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். அவர், இன்று 7-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி, 8 மணிநேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வகையில் பா.ஜ.க. முதலில், திட்டமிட்டு இருந்தது. எனினும், நீட் தேர்வை கவனத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ஊர்வலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் மோடி பெங்களூருவில் நேற்று 26 கி.மீ. தூரத்திற்கு ஊர்வலம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று மத்திய பெங்களூரு வழியே 10 கி.மீ. கடந்து சென்ற அவரது ஊர்வலம் 5 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

இதன்பின், சிவமொக்கா நகரில் பேசிய பிரதமர் மோடி, 9 ஆண்டுகளில் 2 ஆயிரம் வகையான விதைகளை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறோம். நாட்டில் நெருக்கடியான தருணத்திலும், உர பற்றாக்குறை எதுவும் இல்லாமல் பார்த்து கொண்டோம்.

ரஷியா மற்றும் உக்ரைன் போரால் உர விலை சாதனை பதிவாக அதிகரித்தது. ஆனால், அந்த சுமை நமது விவசாயிகளின் மீது விழாமல் பார்த்து கொண்டோம்.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் மற்றும் வளர்ச்சி பணி என்பது காகிதத்தில் மட்டுமே இருக்கும். அவர்கள் ஒருபோதும் கர்நாடகாவை வளர்ச்சியடைய வைக்க முடியாது. பொய்களை மட்டுமே அவர்கள் தெளித்து வருகின்றனர் என கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்