கடலூரில் செம்மண் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூரில் செம்மண் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-03-01 18:45 GMT

விழுப்புரத்தில் இருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை அமைப்பதற்காக கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவற்றில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக செம்மண் எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று கடலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குவாரிக்கு சென்று, அங்கிருந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் திருவந்திபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாரதியும் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதால் நிலத்தடி நீர் குறைகிறது. இங்குள்ள ஏரியும் தூர்ந்து போகிறது. ஆகவே ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை கேட்ட அவர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்