பிரேசிலில் கனமழை: பயங்கர நிலநடுக்கமும் உருவானதால் மக்கள் பீதி

பிரேசிலில் கனமழை காரணமாக மருத்துவமனைகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

Update: 2024-01-21 23:40 GMT

Image Courtacy: AFP

பிரேசிலியா,

பிரேசிலின் தெற்கு பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று அங்குள்ள சாவ் பாலோ மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் அங்கு பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல வீடுகள் அங்கு இருளில் மூழ்கின.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் பலரை மீட்பு படையினர் மீட்டனர். எனினும் பெண்கள் உள்பட 3 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அதேபோல் சொரோகாபா நகரில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரேசிலின் தாராவ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 628.8 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது. இதன் காரணமாக அங்கு பல வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இது அங்கு வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்